88929 25504
 
  • Total Visitors: 3745792
  • Unique Visitors: 308277
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தறிநாடா நாவல்

தறிநாடா’ அண்மையில் வெளிவந்த நாவல் (ஆகஸ்டு, 2013) என்றாலும் அது 1970களிலிருந்த திருப்பூர் நகரத்தின் நெசவாளர் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. கைத்தறிகளும் விசைத்தறிகளும் அழிந்து, பனியன் கம்பெனிகளால் நிறைந்து, திருப்பூர் பெரும் தொழிற்சாலை நகரமாய் உருமாறி, நொய்யல் ஆற்றைச் சாய ஆறாக மாற்றிய வரலாற்றை ‘சாயத்திரை’ நாவல் சொல்கிறது (முதல் பதிப்பு. 1998). 1990களின் திருப்பூர் நகர வாழ்வு இதில் முதன்மை பெறுகின்றது. ‘நீர்த்துளி’ நாவல் (டிசம்பர் 2011) இருபத்தோராம் நூற்றாண்டுத் திருப்பூர் நகரத்தைப் படம்பிடித்துள்ளது. இம்மூன்று நாவல்களும் திருப்பூர் நகரத்தின் தொடர்ச்சியான நாற்பது ஆண்டுக்கால வரலாற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. திருப்பூர் நகரம், அதன் மரபான நெசவுத் தொழிலை, வளமான இயற்கை எழிலை இழந்து முதலாளித்துவத்தின் அகோரப்பசிக்கு இரையாகி, வாழ்விடமும் தொழிலிடமும் பிரித்தறியமுடியாதபடி பெரும் தொழிற்சாலை நகரமாகி மாசுபட்ட நகரமாக மாறிய வரலாற்றை இந்நாவல்கள் எடுத்துரைக்கின்றன.

‘தறிநாடா’, ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ போல் எம்.வி.வெங்கட்ராமனின் ‘வேள்வித்தீ’யைப் போல் நெசவுத்தொழிலாளரின் வாழ்க்கைச் சிக்கல்களை எடுத்துரைக்கின்றது. கொங்கு வட்டாரத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ‘தேவாங்கர் செட்டியார்’ களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையை இந்நாவல் பதிவு செய்துள்ளது. மரபான கைத்தறி முறை மாறி விசைத்தறி திருப்பூர் வட்டாரத்தில் நுழைந்ததும் அதனால் கைத்தறி நெசவு நலிந்ததும் இந்நாவலின் பிரச்சினையாக அமைந்துள்ளது. விசைத்தறிகளின் வருகையும் பனியன் கம்பெனிகளின் நுழைவும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பு களை இந்நாவல் அனுதாபத்துடன் சித்திரிக்கின்றது. கைத்தறி நெசவுக்கான கூலி குறைக்கப்பட்டதை எதிர்த்து நெசவாளர்கள் நடத்திய ‘நெசவுக்கட்டு’ என்னும் வேலைநிறுத்தப் பேராட்டம் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, அது மிகப்பெரிய போராட்டமாகத் திருப்பூர் நகரை உலுக்கிய ‘போராட்ட வரலாறு’ இந்நாவலின் மையக்கருவாக அமைகின்றது. போராட்டம், குறிப் பிட்ட சாதியினர் (தேவாங்கர்) நடத்திய போராட்டமாக அமைந்தமையாலும் அது வர்க்கப் போராட்டமாக உருவெடுக்காமையாலும் போராட்டம் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. மரபான நெசவுத் தொழிலாளர்களும் இப்போராட்டத்தினால் தங்களது உடைமைகளை, உறவுகளை இழந்து உயிர்ப்பலிக்கு ஆளாகிச் சிதைந்துபோகின்றனர். ‘ரங்கசாமி’ என்னும் ஒரு நெசவாளியின் குடும்பத்தை மையமாக வைத்து இந்த நாவல் இயங்குகிறது. ‘நாகமணி’ என்கிற அவனது மனைவி, ‘மல்லிகா’, ‘ராதிகா’ என்கிற மகள்கள், ‘பொன்னு’ என்கிற அவனது பட்டதாரி மகன்; தருமன், சோமன், அருணாசலம், வெள்ளியங்கிரி, நடேஷ், கோவிந்தன், ஆறுமுகம், சிவசாமி என சகநெசவாளர்கள், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த தோழர் ராஜாமணி, கல்யாணசுந்தரம் ஆகியோர் இந்நாவலின் முக்கிய கதைமாந்தர்கள் ஆவர்.

கூலிக்குறைப்பை எதிர்த்து நெசவாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்துப் போராடினாலும் பசியும் பட்டினியும் தடியடிகளும் சிறைவாசமும் உயிர்ப் பலிகளுமே மிஞ்சுகின்றன. இந்நாவலில் வரும் ‘அருணாசலம்’ போராட்டத்தைச் சாதியின் எழுச்சியாகப் புரிந்துகொண்டு செயல்படுகிறார். ஆனால், அதே நெச வாளர் இன சமூகத்தின் பணக்கார முதலாளிகள் தங்கள் வர்க்கவுணர்வை வெளிப்படுத்திப் போராட்டத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர். ரங்கசாமி மகன் பொன்னு, போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களை ஆராய்கின்றான். சாதியாக அணி திரண்டு வர்க்கமாக உருமாறி, வர்க்க உணர்வு பெறாமையும் அரசியல் கட்சிகளின் ஆதரவின்மையும் இப்போராட்டத்தின் பின்னடைவிற்கான காரணங்களென உணர்கின்றான். நாவலின் இறுதியில் அவன் இடதுசாரி கொள்கைப் பிடிப்புள்ள வர்க்கவுணர்வு பெற்ற தோழனாக மாறுகின்றான்.

காலச் சுழற்சிக்கு ஏற்ப விசைத்தறிக்கும் பனியன் ஆலைக்கும் மாறுவதுதான் தொழிலாளர்களின் வாழ்க்கை இருத்தலிற்கான தீர்வென்பதை உணர்கிறான். தறிக்குழிகள், தறிநாடா, பாவு இலைகள், பில் வார்கள், கஞ்சிப்பசை, பல எண்களைக் கொண்ட நூல்கள், துண்டுத் துணிகள், ஜரிகை நூல் ஆகியவற்றுடன் தறி இயங்கும் ஓசையும் இந்நாவலில் நிரம்பிக் கிடக்கின்றன. நாவலில் வரும் ரங்கசாமி சபிக்கப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொள்பவராகவும் அருணாச்சலம், பொன்னு ஆகியோர் சபிக்கப்பட்ட வாழ்க்கையை எதிர்த்துப் போராடுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். தேவாங்கர் இன கைத்தறி நெசவாளர்களின் சமூக வாழ்க்கை மட்டுமன்றிப் பண்பாட்டு வாழ்க்கையும் இந்நாவலில் விரிவான சித்திரிப்பைப் பெற்றுள்ளது. தேவாங்கர் செட்டியார்களின் குலதெய்வமான சௌண்டி அம்மனின் கோவிலும், கோவில் திருவிழாவும் சப்பரம் எடுப்பும் நாவலில் சித்திரிப்பைப் பெற்றுள்ளன. தேவாங்கர், நெசவுத் தொழிலை மேற்கொண்டமைக்குக் காரணமாகச் சொல்லப்படும் தேவாங்கர் புராணமும் நாவலில் ஓரிடத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது:

“பிரமன் பல புவனங்களையும் உயிர்களையும் படைத்தார். ஆதி மனுவை, பிரமன் ஆடைதரப் படைத்தான். மனு கடமையை நிறைவேற்றிய வேலை முடிந்தது என்று பரம்பொருளிடம் அய்க்கியமானோர் ஆடையின்றிப் பின்னர் தவித்தனர். சிவன் தேவனைப் படைத்தார். திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய தாமரை நூலை வாங்கிச் சென்று ஆடை நெய்யச் சொன்னார். சிவன் இமயமலைக்குத் தெற்கே சகர நாட்டுத் தலைநகர் ஆமோதா உன் ஊராகும் என்றார். திருமால் தாமரை நூலைத் தந்து பாதுகாப்புக்காக சக்கராயுதம் ஒன்றைக் கொடுத்தார். வரும் வழியில் தங்கியிருந்த ஆசிரமத்தில் இருந்த அரக்கர்கள் சுய ரூபத்தை வஜ்ரமுடி, தூர்மவக்கிரன், தூம்ராச்சன், சித்திர சேனன், பஞ்சசேனன் என்று ஐந்து பேராக மாறி தேவரிடம் இருந்து நூலைப் பறிக்க முயன்றனர். சக்கராயுதத்தை அவர் ஏவ அரக்கர்கள் நிலத்தில் விழுந்த ரத்தத்திலிருந்து ஆயிரக்கணக்கில் தோன்றிப் போரிட்டனர். சக்கராயுதம் செயலற்றுப் போனது.

தேவலர் தனக்கு உதவ தாயார் சண்டிகையை எண்ணிப் பிரார்த்தனை செய்தார். ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் கிரீடத் துடன் தோன்றினாள் சௌடேஸ்வரி. சூலம், சக்கரம், கத்தி, கதாயுதம் என்று நான்கு கைகளில் மின்னின. அரக்கர்களின் ரத்தம் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என ஐந்து வர்ணமாய் இருந்தன. தேவலர் தன்னிடம் இருந்த நூலை அய்ந்தாய்ப் பிரித்து வர்ணங்களில் நனைத்துக் கொண்டார். எஞ்சிய அரக்கர்களின் ரத்தத்தை பூமியில் விழாது சிம்ம வாகனம் குடித்து முடித்து சிலிர்த்தது. அப்போது அதன் காதுகளில் ஒட்டியிருந்த இரு துளி ரத்தம் கீழே விழுந்து அதிலிருந்து இரு அரக்கர்கள் தோன்றி வணங்கினர். அவர்களுக்கு மாணிக்கத்தார்கள் என்று பெயரிட்டு தேவலரின் பணிக்கு வைத்துக் கொண்டார். “நான் சூடாம்பிகை. நீயும் இன்று உனக்கு நேர்ந்த ஆபத்தில் இருந்து மீண்டாய். எனவே நம் இருவருக்கும் இதுவே பிறந்த நாளாகும்.” (பக். 5-6)

ரங்கசாமி தனக்குத் தொழிலில் சோதனை வருகின்ற போதெல்லாம் புராணத்தில் வரும் தேவலர், வந்து தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என்று நினைக்கின்றார். தறி ஓடாமல் இருக்கின்ற பொழுது தேவதச்சன் உருவாக்கிய இத்தறி புழுதிபடிந்து கிடப்பதை எண்ணி வருந்துகின்றார். நாவலின் மொழி, பெரிதும் பொது வழக்கு மொழி சார்ந்து விளங்குகின்றது. சில இடங்களில் தேவாங்கர் செட்டியார் மக்கள் பேசுகின்ற கன்னட மொழி வழக்கும் கலந்து இடம்பெறுகின்றது.

“நடேஷ் மாமா நம்மப்ப எல்லி” என்கிற மழலையால் வீதியின் ஒரு வீட்டு முகப்பைப் பார்த்தான்... நாடார் டீ அங்கிடிலி இந்ததே” என்றபடி நாலு வயசை எடுத்து முகத்தில் முத்தம் ஒன்று இட்டபடி நடந்தான்.” (ப.161)

மக்கள் வழக்கு மொழியைப் போன்று, “நெய்யறவன் வூட்லே கோமணம். கொல்லன் தெருவிலெ ஊசிப் பஞ்சம்” முதலான பழமொழிகளும் நாவலில் இடம் பெறுகின்றன.

நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நெசவாளியாகத் தான் இருக்கவேண்டும் என்கிற பிறப்பும், சாதியும், தொழிலும் இணைந்த நிலவுடைமைச் சமூகத்தின் நிலைப்பாடு, நாவலில் வரும் நெசவாளர்களின் மனோபாவத்தில் நீங்காமல் இடம்பெற்றிருக்கிறது. குழந்தையைக் குளிப்பாட்டும் பொழுதுகூட ‘இந்தக் கைதான் நெசவு நெய்து என்னைக் காப்பாற்றும். இந்தக் கால்தான் நெசவு நெய்து என்னைக் காப்பாற்றும்’ எனச் சொல்லிக் குளிப்பாட்டுகின்றனர். தறிக்குழிகளில் கால் எட்டும் அளவிற்கு வளர்ந்தவுடனே குழந்தைகளைத் தறிகளில் உட்காரவைத்து விடுவார்கள்.

ஆனால், நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நெசவாளியாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சமூக விதியை நாவலில் வரும் பொன்னு மாற்றுகிறான். இந்நாவல் முழுக்க நெசவாளர் குடியிருப்புகளைப் பற்றியதாக இருந்தாலும் அவ்வாழ்க்கை தனித்துக் காட்டப்படாமல் கவுண்டர், பூம்பூம் மாட்டுக்காரர் முதலான பிற சமூகப் பிரிவினருடன் அவர்கள் கொண்டிருக்கிற சமூக உறவுகளும் வெளிப் படுத்தப்பட்டுள்ளன. நெசவாளர்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக சீட்டாட்டமும், பெருக்கான் (பெருச்சாளி) வேட்டையும் இந்நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. சமகால நெசவாளிகளின் வரலாறு மட்டுமின்றி வெள்ளையர் கால நெசவாளர் வரலாறும் அப்போதிருந்த கூலிப் பிரச்சினையும் நாவலில் ஓரிடத்தில் விவரிக்கப் பட்டுள்ளன. ஆறுமாத காலம் நடந்த கூலி உயர் விற்கான போராட்டத்தில் ஏற்பட்ட பட்டினியைச் சமாளிக்க, சில நெசவாளர்கள் கேரளத்திற்கு அரிசி கடத்துகின்ற தொழிலைச் செய்து அவலத்தில் மாட்டிக் கொள்கின்றனர்.

நெசவாளர் போராட்டம் தறிகளை வெறுமையாக்கி மூளியாக்கியது போன்று நெசவாளர் களின் உடம்பும் மனதும் சந்தோஷங்களும் மூளியாகிப் போகின்றன. ஒரே ஜாதி என்றாலும், நெசவு நெய்கிறவன் கீழ் ஜாதி, நெய்யாத முதலாளி மேல்ஜாதி என்கிற உண்மையை நெசவுத்தொழிலாளர்கள் இந்நாவலின் இறுதியில் உணர்ந்துகொள்கின்றனர். போராட்ட மானது, அரசியல் சார்பும் தத்துவச் சார்பும் பெறுகின்ற பொழுதுதான் அது வெற்றிபெறும், மக்கள் பிரச்சினை களைத் தீர்க்கும் போராட்டம் என்கிற வாள், மக்கள் பட்டறையில்தான் தீட்டிச் செழுமையாக்கப்பட முடியும் ஆகிய சமூக உண்மைகளை நாவலின் இறுதியில் உழைக்கும் நெசவாளர்கள் உணர்ந்துகொள்கின்றனர். நெசவாளர் போராட்டத்தை இலட்சியப்படுத்தி அற்புதப் புனைவாகக் காட்டாமல், தன்னெழுச்சியாகப் பிறந்த போராட்டத்தின் பலன்களையும் பலவீனங் களையும் நாவலாசிரியர் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

II

பறவைகளின் கூட்டொலிகளைப் போன்று கைத்தறிகளின் விசை ஒலிகளால் நிரம்பி வழிந்த தறி பூமியான திருப்பூர் என்னும் சிறு நகரம், பேரிரைச்சல் கொண்ட இயந்திரங்கள் இயங்கும் பனியன் தொழிற் சாலைகள் நிறைந்த தொழிற்பேட்டையாக உரு மாறுதலை ‘சாயத்திரை’ நாவல் விவரிக்கின்றது. கைத் தறிகள் ஓடிய வீடுகள், விசைத்தறிகளின் கிட்டங்கி களாக பனியன் கம்பெனிகளாக மாறுகின்றபோது, கைத்தறிகளும் கைத்தறி நெசவாளர்களும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வெளியிலிருந்து வந்து பனியன் கம்பெனிகளைத் தொடங்கிய புதுப்பணக் காரர்கள் நகரத்தை ஆட்டிப்படைப்பவர்களாக, அதிகாரம் நிறைந்தவர்களாக மாறுகின்றனர்.

இயந்திர மயமாதலும் முதலாளித்துவமும் இயற்கையின் மீதும், மனித உழைப்பின் மீதும், மனித உறவுகள் மீதும் மனிதர்கள் கொண்டிருந்த மரபான அக்கறையை, மனித நேயப் பண்பாட்டைக் காணாமல் போகச் செய்கின்றன. உயிர்த்தன்மை கொண்ட இயற்கையும் மனிதர்களும் பண்டமாகப் பாவிக்கப்பட்டு, அவர்கள் பெரும் சுரண்டலுக்கும் நுகர்வுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பனியன் தொழிற்சாலை இயந்திரங்களில் நெய்து, கசக்கி, சாயமேற்றி வெளியே துப்பப்படும் பனியன் களைப் போல உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களும் சக்கையாய்ப்பிழிந்து வெளியே துப்பப்படுகின்றனர். சோழர் காலந்தொட்டு இயற்கைக்கும் மனிதர்களுக்கும் உயிர் உணவான நொய்யலாறு தன் உயிர்த்தன்மையை இழந்து பலவர்ண சாயங்கள் ஓடும் சாய ஆறாக - சாக்கடையாக மாறுவதும் இந்நாவலில் எடுத்துரைக்கப் படுகிறது. பெரும் தொழில் நகரத்தின் உருவாக்கத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவது இந்நாவலின் மையப் பிரச்சினையாக இருக்கிறது. அதன்வழி, சுற்றுச்சூழல் குறித்த ஓர் அக்கறையை இந்நாவல் முன்னெடுத்துள்ளது.

பனியன் கம்பெனி முதலாளி சாமியப்பன், அவனது தொழிற்சாலையில் வேலை பார்க்கின்ற பக்தவத்சலம், நாகமணி, ஜோதிமணி இவர்கள் கம்பெனிக்கு எதிரி லிருக்கும் பல வாடகை வீடுகளைக் கொண்ட கட்டடத்திற்குச் சொந்தக்காரரான செட்டியார், ஜட்டி கம்பெனி முதலாளி பெரியண்ணன், சாயத்தொழிலில் ஈடுபட்டு உடம்பெல்லாம் புண்ணாகி அழுகிப்போன வேல்சாமி, அவனது மனைவி சௌந்தரி, நாகனோடு நேசம் பாராட்டி அவனோடு சதுரங்கம் விளையாடுகின்ற குழந்தைத்தொழிலாளி குமார் ஆகியோர் இந்நாவலின் முதன்மைக் கதை மாந்தர்கள் ஆவர். பனியன் தொழிற் சாலைத் தொழிலாளியான பக்தவசலம் மேலை நாட்டி லிருந்து வரும் பத்திரிகைக்காரியான ரோசாவிற்குத் திருப்பூர் நகரத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் காட்டுவதுடன் இந்நாவல் தொடங்குகின்றது.

திருப்பூர் நகர சாயப்பட்டறைகளுக்குச் சுற்றுக் கிராமங்களிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொண்டுவரும் தண்ணீர் லாரிகள், தண்ணீர் லாரிகளில் அரைபட்டுக் கூழாகும் நாய்கள் - கழுதைக் குட்டிகள் - ஆடுகள், சாயப்பட்டறைகளில் வெடித்துச்சிதறும் கொதிகலன்களோடு வெடித்துச்சிதறும் மனிதர்கள் - சாய நீரைக் குடித்து காலிழுத்துச் சாகும் நாய்கள் - சாயத்தைக் கலந்து கலந்து உடலெல்லாம் சாயமாகிச் சீழ்வடியும் புண்ணாகி வேதனை தாங்காது சாராயம் குடித்து வேதனையை மறக்கும் மனிதர்கள் (வேலுசாமி), உடம்பெல்லாம் புண்ணான கணவனின் காம இச்சைக்கு ஆளாக மறுத்து, தூக்கில் தொங்கும் இளம் பெண்கள் (சௌந்தரி) - குடிநீருக்காக ஓடியலையும் மனிதர்கள் - குடிநீர்க் குழாயில் சாக்கடை புகுந்துவிட்டதால் ஓங்கரித்து வாந்தியெடுக்கும் மனிதர்கள் - சாயநீர் ஊறும் கிணறுகள் - சாயச் சாக்கடைகள் ஓடும் தெருக்கள் - பனியனில் லேபிள் தைக்கும்போது கண்ணில் ஊசி தைத்து அவதிப்படும் சிறுவன் - என நாவல் முழுவதும் மனிதத் துயரங்களும், துயரங்களில் அல்லல்படும் மனிதர்களும் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

நாவல் முழுவதும் மனித சோகமே கவிந்து நிற்கிறது. சாயம் விஷநாகமாகச் சீறி திருப்பூர் நகர மக்களையும் நாவலை வாசிக்கும் வாசகர்களையும் அச்சுறுத்துகின்றது. சாயத்தால் புனிதச் சடங்குகள் செய்யும் கிணறு உட்பட அனைத்துக் குடிநீர் ஆதாரங்களும் மாசுபட்டு, மாசுபட்ட நொய்யல் ஆற்றால் சாயம் பூத்த விளைநிலங்கள், சாயங்கள் அப்பிக் கருமையடைந்த பயிர்கள் எனத் திருப்பூர் நகரம் மட்டுமன்றி நகரத்தைச் சுற்றியுள்ள விளைநிலங்களும் மாசுபட்டுப் போனதை நாவல் சித்திரிக்கிறது. தொழிற் சாலைக் கழிவுகள் நிறைந்து சாக்கடைகளால் சூழப் பட்டு, கால்வைத்து நடமாட முடியாது, மனிதர்கள் வாழ்வதற்கு அருகதையற்ற நகரமாகக் கோர முகத்துடன் திருப்பூர் மாறிவிட்டதை இந்நாவல் பதிவு செய்கின்றது. சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் நீர் சாக்கடையாகி, பேராறாகி, சிற்றாறாகி, சாயத்திரைகள் எழுப்பும் பெருங்கடலாகிறது. அக்கடலில் எதிர்நீச்சலிட முடியாமல் மனிதன் மெல்ல மூழ்கிச் சாகிறான்.

பனியன் தொழிற்சாலைகளில் இரைச்சல்களுக்கும் சாய ஆற்றின் வீச்சங்களுக்கும் மத்தியில் கொங்கு நாட்டுப் பண்பாட்டுச் சாறுகள் மெல்லிய இழையாக ஓடத்தான் செய்கின்றன. வாடகை வீடுகளின் கட்டடச் சொந்தக்காரரான செட்டியார் பாத்திரம் வழியாக, தேவாங்கர் இனப்பண்பாடு வெளிப்படுகிறது. செண்டியம்மன், சௌண்டியம்மன் சப்பரம், சப்பரத் திருவிழாவில் அலகுக்கத்திகளை மார்பில் அடித்தாடும் தேவாங்கச் செட்டியார்கள்,

“அம்மனையெ யாந்துரு கோபா...”
“எதாச்சும் வாக்கு கொட்டுடறத்தா நா எந்திருவ அம்மா...”
“அம்மா எதாங்கெ இத்துருன்னு மாத்து ஏளு. நின்னு மாத்துதா நவியெ வாக்கு”
“அம்மா நீ யாந்துரு ஏளுத்தியோ அதுனக் கேளுத்தேரே... ஏளும்மா...”

என வரும் கன்னட மொழி உரையாடல்கள், செட்டியார் பாத்திரம் வழி வெளிப்படுகிறது. ‘நாகன்’ பாத்திரம் கொங்கு நாட்டின் கிராமியப் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. தெருக்கூத்தில் ஆர்வமுள்ள சாத்துக்கட்டுகிற நாகனின் நினைவுகள், பேச்சுக்கள் வழி கன்னிப்பெண்கள் நடத்தும் பெரிமாத்துச் சடங்கு, பூப்பறிக்கிற நோன்பு, நெட்டுக்கும்மி, வட்டக்கும்மி, வைகுந்தக்கும்மி, கொங்கு நாட்டுப்புற மக்களின் நாவு களில் அதிர்ந்து எழும்பும் ‘ஓலையக்கா கொண்டையிலே ஒரு கூடைத் தாழம்பு...” என்னும் பாடல் ஆகியன வெளிப்படுகின்றன. புருஷனுக்காக உயிர் துறந்த வீரமாத்தியம்மன் கதை, வெற்றிலை வியாபாரத்திற்குப் போன அம்மிணியிடம் தவறாக நடக்க முயன்ற ஓர் ஆடவன் அவளைத் தொட முயல்கையில் அவள் வலது கையில் ஆக்கை அரிவாளுடன் கல்லாகி ‘வெத்திலைக் கன்னிமார்’ ஆன கதையும் நாகனால் இந்நாவலில் எடுத்துரைக்கப்படுகின்றன.

III

‘சாயத்திரை’ நாவல் திருப்பூர் நகரம் சாய நகரமாக மாறிய வரலாற்றைச் சொல்கிறது. என்றால், சுப்ரபாரதி மணியனின் ‘நீர்த்துளி’ நாவல் சாயக்கழிவுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தையும் அரசாங்கத்தின், நீதி மன்றத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மாற்றங்களை, விளைவுகளைச் சொல்கின்றது. திருப்பூரைப் பற்றிய முன்னர் விளக்கிய இரண்டு நாவல்களிலும் மனிதர்கள் இயங்குகின்ற புற உலகம் மையப்பட்டது என்றால், ‘நீர்த்துளி’ நாவலில் திருப்பூர் நகர மாந்தர்களின் அக உலகம் மையப்பட்டுள்ளது. வறுமையில், பொருளாதாரச் சீரழிவால், மனித உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களால், முறிவுகளால் தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்தும் சிறு நகரங்களிலிருந்தும் திருப்பூருக்குப் புலம்பெயர்ந்துள்ள மனிதர்களின் வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கின்றது. புலம்பெயர்ந்து வந்த மனிதர்களின் பெருக்கத்தால் புதிதாய் முளைத்த புறநகர்ப்பகுதிகளும் அதன் குடியிருப்புகளும் - தனித்தனியாக நபர்கள் சேர்ந்து வாழும் ஆடவர் - மகளிர் விடுதி இந்நாவலின் பின்புலமாக ஆகியுள்ளன. புதிய புதிய வேலைகளுக்கும் புதியபுதிய தொழில் நிறுவனங்களுக்கும் மாறிச் செல்கின்ற மனிதர்கள் நிரந்தர மணவுறவுகளின்றிக் கள்ள உறவுகளிலும் ‘இணைந்து வாழ்வதிலும்’ஈடுபடுவதை இந்நாவல் விவரிக்கின்றது.

தொழிற்களங்கள் பெண்களுக்கு எதிரானவையாகவும் பாலியல் வன்முறைக் களங்களாக விளங்குவதையும் ‘சுமங்கலி’த் திட்டத்தால் பெண்களின் உழைப்புச் சுரண்டப்படுவதையும் இந்நாவல் சுட்டிக்காட்டுகிறது. வெவ்வேறு ஊர்களிலிருந்து பொருளாதாரத் தேவை களுக்காகத் திருப்பூருக்குப் புலம் பெயர்ந்து வந்து விடுதியறைகளில் வசிக்கும் திருமணம் ஆகாத இளைஞன் ‘லிங்க’மும் கணவனைப் பிரிந்து வாழ்கின்ற ‘கலா’வும் சேர்ந்து வாழ (லிவ்விங் டு கெதர்) தொடங்குவதிலிருந்து இந்நாவல் தொடங்குகின்றது. சூழல் மாசுக்கெதிரான போராட்டத்தால் ஏற்படுகின்ற வேலைநிறுத்தப் போராட்டங்களும், தொழில் நிறுவனங்களின் கதவடைப்பும் மூடல்களும் இவ்விருவரது வாழ்க் கையைப் பாதித்து அவர்களை அலைக்கழிக்கின்றன. இவர்கள் மட்டுமின்றி, இந்நாவலில் வரும் பலரும் இப்போராட்டத்தினால் அலைக்கழிக்கப்படுகின்றனர்; அல்லல்களுக்கு உள்ளாகின்றனர். சிக்கந்தர், லியாகத், ஜேக்கப், சகுந்தலா, பரமேஸ்வரி, சுப்ரமணியன் போன் றோர் இந்நாவலில் வரும் முதன்மைப் பாத்திரங்கள். ஆறும், குளங்களும் கிணறுகளும் மாசடைந்ததைப் போல் மனித மனங்களும் நகர வாழ்வில் மாசடைந்து போகின்றன. சுற்றுக்கிராமங்களிலிருந்து வேலைக்கு அள்ளிவரப் படுகின்ற தொழிலாளர்கள் சாலை விபத்தில் இறந்துபோவதும், வாழ முடியாது தற்கொலை செய்து கொள்வதும் அந்நகரத்தின் அன்றாட நிகழ்வாக இருக் கின்றது.

பின்னலாடை வணிகமும் பெரும் சூதாட்ட மாக மாறுகின்றது. பரமபத ஏணியில் ஏறுகின்றவர்கள் விஷப்பாம்பால் கொத்தப்பட்டு பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், நகரம் என்கிற அரக்கன் எல்லா உயிர்களையும் வாரி விழுங்கிக்கொண்டு துள்ளித் திரிகிறான். நகர வாழ்வின் அரக்கத்தனம் லிங்கத்தின் கனவில் இவ்வாறு காட்சிப்படுத்தப்படுகிறது.

“அவன் அந்தக் கிணற்றின் அருகில் நின்றிருந்தான். கிணறு முழுக்க பிணங்களாய் வழிந்தது. உடம்பு மூழ்கியிருக்க எல்லோர் தலைகளும் விழி பிதுங்கல்களுடன் வெளியே தெரிந்தன. அதில் சிக்கந்தர் தலை கோரமாக இடதுபுற முகத்தில் ரத்தம் தோய்ந்திருந்தது. லியாகத், சுப்ரமணியன் போன்றோரின் தலைகளும் இருந்தன. அவன் தலை இருந்ததா என்று சரியாக ஞாபகம் வரவில்லை. கிணற்றுக்குள் இவ்வளவு பிணங்கள் எப்படி வந்தன? இவ்வளவு பிணங்கள் மிதக்கும் இது கிணறா அல்லது ஏதாவது குளமா?” (ப.170)

குடியும் கும்மாளமும் பனியன் ஊரின் கலாச்சாரமாகிவிட்டதையும் இந்நாவல் காட்டுகின்றது. சாயப்பட்டறைக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு, கலைஞரின் ஆட்சி முடிந்து அம்மா ஆட்சிபீடம் ஏறுதல், சமச்சீர்க் கல்விப் பிரச்சினை என்கிற தொடர்ச்சி யான தமிழக சமூக அரசியல் நிகழ்வுகள் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அகோரப் பசியோடு மண்ணையும் மனிதர்களையும் விழுங்குகின்ற முதலாளித்துவத்தின் அதிக பொருளாதார வேட்டைக்கும் நுகர்வுக்கும் எதிராக,

“பசியாற சாப்பிடுவதோ தாகம் தீரக் குடிப்பதோ தவறில்லை. ஒரு வண்ணத்துப் பூச்சி பூவிலிருந்து அது வாடாமலும் கசங்காமலும் உறிஞ்சுவது போல் உங்கள் வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்” (ப.136)

என்பது இந்தநாவலின் சமூகஅறமாக உரத்தகுரலில் ஒலிக்கிறது. திருமண பந்தமின்றி இணைந்து வாழ்ந்த லிங்கமும் கலாவும் இணைந்து வாழ்தல் முறையின் பொருளாதார, உளவியல் சிக்கல்களை உணர்ந்து பிரிவதோடு நாவல் முடிவடைகிறது. “நொய்யலில் இனி ஒரு சொட்டுச் சாயம்கூட விழ அனுமதிக்க மாட்டோம்” என்ற விவசாயியின் குரல் நாவலின் இறுதி வாசகமாக அமைகின்றது. நொய்யலாற்றின் சாயக்கழிவுச் சிக்கலை விட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலும் காமமும் அது சார்ந்த உளவியல் சிக்கல்களுமே இந்நாவலில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நகரவாழ்வில் திருமணமாகாத ஆணுக்குத் ‘தனிமை’யும் பெண்ணுக்குப் ‘பாதுகாப்பின்மை’யும் உளவியல் சிக்கல்களாகி அச்சுறுத்துவதை இந்நாவலின் தலைமை மாந்தர்களான லிங்கமும் கலாவும் வெளிப் படுத்துகின்றனர். தனிமைத் துயரில் சிக்கித் தவிக்கும் லிங்கம், தான் ஒரு பூச்சியாக உருமாறுவதாக உணர் கிறான்.

“பூச்சியாக மாறிக்கொண்டிருந்தான் அவன். களிமண் உடல் குழைந்து நீராகிக் கொண்டிருந்தது. உணவுக்குழாய் ஒரு புல்லாங்குழல் போல் காற்றை விசிறிக் கொண்டிருந்தது. சப்தமில்லாமல் காதை ஏதோ அடைத்துவிட்டுப்போனது. சாரைப்பாம்பு திரும்பித் திரும்பிப் படுப்பதுபோல் குரலை மிரட்டிக்கொண்டு வந்தது. கபகப எரிச்சல் மூச்சில் பற்றும் தீ. தீ வாசனை அவனின் உருகும் கால்களின் பக்கம் சேர்ந்திருந்தது. வழிக்கலாமா என நினைத்தான். வேண்டாம் இப்படியே கிடக்கலாம். உடம்பு உருகி ஒரு பூச்சியாய் உடம்பில் ஒட்டிக் கொள்ளும்வரை கிடக்கவேண்டியதுதான்” (ப.18) இப்பகுதி காஃப்காவின் ‘உருமாற்றம்’ நாவலை நினைவுபடுத்துகிறது.

IV

கொங்கு வட்டாரத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல்களாக ‘கவுண்டர் கிளப்’, ‘இருளிசை’, ‘மரபு’ ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. ‘மரபு’ குறுநாவல் ‘தறிநாடா’ நாவலின் ஒரு சிறு பகுதியாகும். ‘இருளிசை’, கிராமத்திலிருந்து நகரத்திற்குப் புலம்பெயர்ந்த இசைக் கலைஞன் ஒருவன், தான் பிறந்து வளர்ந்த நெசவுத் தொழில்சார்ந்த கிராமமான ‘செகடந் தாழி’க்குச் சென்று கடந்த காலத்தை அசைபோட்டு மீள்வதை விவரிக்கிறது. ‘கவுண்டர் கிளப்’, கிராமத்தில் வாழும் நம்பியா அழகுக் கவுண்டர் தனது இனத்தின் மரபான வேளாண் தொழிலிலிருந்து தேநீர்க் கடைத் தொழிலுக்கு மாறியதையும் கனகம் என்கிற இளம் விதவையோடுகொண்ட கள்ளக் காதலையும் விவரிக்கிறது. இக்குறுநாவலின் நாயகனான நம்பியா அழகுக் கவுண்டர் கொங்கு வட்டார மொழியின் இலாவகத்தையும், சாதுரியத்தையும், நக்கலையும் பெற்றவராகத் திகழ்கிறார்.

அவரது உரையாடலில் வெளிப்படும் வாழ்வியல் பழமொழிகள் சில:

“சாப்படறப்பவும், பொம்பளையோட தனியா இருக்கறப்பவும் வெக்கத்தே விட்டவனுக்குதா சொகம் கிடைக்கும்”
“பொன்னங்கன்னிக்கு புளியிட்டு ஆக்கினா உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்”
“முருங்கக்கான்னா முறிந்ததாம் பத்தியம்”
“வெள்ளப்பூண்டு பெத்தவளவிட நல்லது செய்யும்”
“மறுசாதம் போட்டுக்காதவ மாட்டுப் பொறப்பு”

கொங்கு வட்டார விவசாயக் கிராமங்களில் நிகழ்த்தப்படும் மலைக்கஞ்சி எடுத்தல், கொடும்பாவி கட்டி இழுத்தல், பாவைக் கலத்தாடுதல், கும்மி கொட்டுதல், ஓலையக்கா பாட்டுப் பாடுதல் ஆகிய நாட்டுப்புறப் பண்பாட்டு நிகழ்வுகள் இக்குறு நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுப்ரபாரதிமணியனின் நாவல், குறுநாவல்களுள் இப்படைப்பு மட்டுமே கொங்கு வட்டாரக் கிராமியப் பண்பாடு சார்ந்து அமைந்துள்ளது. ஏனைய படைப்புக்கள் முன்பே குறிப்பிட்டபடி ‘நகரத்திணை’ சார்ந்தவை.

V

சுப்ரபாரதிமணியனின் திருப்பூர் நகரம் குறித்த நாவல்கள் தொழில்மயமாதலின் விளைவாக நிலவியலிலும் மனித வாழ்விலும் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக் கின்றன. ஆயின் சிகந்திரபாத் குறித்த சுடுமணல், நகரம் 90, வர்ணங்களில் ஆகிய நாவல் - குறுநாவல்கள் பெரு நகரத்தில் மனிதநேயமும் மனிதவுணர்வுமற்று இயந்திர மாகிப் போன மனிதர்களைச் சித்திரிக்கின்றன. ஆந்திர மாநிலத் தலைநகரம், மதம் சார்ந்த பண்டிகை நாட்களில் கலவர பூமியாக மாறுவதும், மரணம் நகர மனிதர்களால் மிகச் சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ளப்படுவதும், மிகக்கொடூரமான கொலை கூட சில நிமிடங்களில் துடைத்தெறியப்பட்டு நகரம் இயல்பாக மாறி இயங்குவதும் இப்புனைகதைகளில் சித்திரிக்கப்படுகின்றன. இப்படைப்புக்களில் வரும் கதைமாந்தர்கள் எப்போதும் அச்சத்தாலும் பயங்கரத் தாலும் பீடிக்கப்பட்டு பதற்றத்துடன் அலைந்து திரிகிறார்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தமது இன-மொழி பண்பாட்டு அடையாளங்களால் இன்னல்களுக் குள்ளாவதும் இப்புனைகதைகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

சுடுமணல் நாவல் மகேந்திரன் என்ற வேலை இல்லாத இளைஞனின் நோக்கு நிலையிலிருந்து ஹைதராபாத் நகரத்தின் பதற்றம் மிகுந்த நாட்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ‘பந்த்’ நடப்பதற்கு முன்னும் பின்னுமான நாட்கள் நாவலில் விவரிக்கப் பட்டுள்ளன. கலவரத்தின்போது நிகழும் மனித உயிர்களின் மரணத்தை எதிர்கொள்ளும் நகரத்து மனிதர்களின் இதயமற்ற மனோபாவமும், ஈரமிக்க கதைத்தலைவன் மகேந்திரனின் மனமும் முரண்பட்டு நிற்பதுதான் நாவலின் மைய இழுவிசை. நகரத்து மனிதர்களின் இதயத்தை மகேந்திரன் கற்சுவர்களாகக் காண்கிறான்.

“சமையலறையில் இருக்கின்றவரை நாலு சுவர் களையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். கல் சுவர்கள், நகரத்து மனிதனின் இதயத்தைப் போன்ற திடம்தான். கொலைக்குரல் பக்கத்தில் கேட்டாலும் சாவகாசமாக இருக்கச் சொல்லும் சுவர்கள்.” (ப.2)
நகரத்தில் அன்றாடம் நடக்கின்ற கொலைகள், சாவுகளை வெறும் செய்திகளாக மட்டும் புரிந்து கொண்டு, எவ்வித அதிர்ச்சியுமின்றி சாதாரணமாக இயங்கும் மனிதர்களைப் பார்த்து மகேந்திரன் அச்சப்படுகின்றான்.

“நகரமே இப்படித்தான் பிணங்களின் மத்தியில் சாவகாசமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. அம்மா தானும் ஒரு பிணமாகத் தன்னை நினைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டாளோ என்று அவனும் பல சமயங்களில் நினைத்ததுண்டு.” (ப.11)

நகரத்தில் நிகழும் தொடர் மரணங்களும், வேலையில்லாத் திண்டாட்டமும், வெறுமையும் மகேந்திரனை இருத்தலிய மனோபாவம் உடையவனாக மாற்றுகின்றது. காலம் எல்லோருக்கும் இயக்கம் மிக்கதாகத் தோன்ற, அவனுக்கு மட்டும் உறைந்து நிற்கின்றது.

“காலம் கட்டப்பட்டு எங்காவது மரணப் படுக்கையில் கிடக்கும். எல்லோருக்கும் காலம் நகர்ந்து எதை எதையோ நிகழ்த்திக் காட்டிப் போகிறது. தன்னை மட்டும் அப்படியே விட்டுவிட்டிருக்கிறது. ஒரு அடி கூட நகரவிடவில்லை. வாகனத்தின் வெளிச்ச ஒளிக்குள் அமிழ்ந்துவிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.” (ப.64).

மகேந்திரனைத் திருப்பூருக்கு அனுப்பிவிட்டு ஊரடங்கு நாள் ஒன்றில் அவனைக் காண்பதற்காக ஹைதராபாத்திலிருந்து புறப்படும் அவனது அப்பா ‘வெங்கடய்யா’வின் நோக்கு நிலையில் நாவலின் இறுதிப்பகுதி இயங்குகின்றது. தமிழகத்திலிருந்து, வேறு மொழி பேசுகின்ற, ஹைதராபாத்தில் முப்பதாண்டுகளாக வசிக்கின்ற வெங்கடய்யா பண்பாட்டு வேர்களைத் தேடு பவராகவும் அடையாள நெருக்கடியில் அல்லலுறுகின்ற வராகவும் படைக்கப்பட்டுள்ளார். அவர் புலம்பெயர்ந்து வந்த தன்னை ஒரு வாலறுந்த பட்டமாக எண்ணு கின்றார். முன்பு இயல்பாக வெளிப்படுத்துவதற்கு உரியதாக இருந்த மொழி, இனம், கலாசாரம் (தாலி அணிதல்) சார்ந்த அடையாளங்கள் தற்போது ஊரடங்கு நாட்களில் வெளிப்படுத்துவதற்குத் தகுதி யற்றதாக மாறிவிட்டதை எண்ணி வருந்துகின்றார். ஊரடங்கு நாட்களில் பிள்ளைகளைக் காணாது தவிக்கும் பெற்றோரின் பரிதவிப்பு உணர்வு இவரின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சிக்கல் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வெவ்வேறு மொழி பேசுவோருக்கான முகாம்களில் மூன்று மொழிகளையும் பேசும் தான் எந்த முகாமில் போய் அடைக்கலமாவது என்ற திகைப்புடன் நிற்பதோடு நாவல் முடிவடை கின்றது.

சுப்ரபாரதிமணியனின் நகரம் ‘90’ என்னும் குறுநாவல் ஆந்திர தலைநகரத்தில் நடக்கும் ஊரடங்கின் குரூரத் தன்மையை மட்டுமல்லாது அதற்குப் பின்னால் உள்ள அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியையும் காட்டுகின்றது. பிரகாஷ் என்னும் இளைஞனின் நோக்குநிலையில் இயங்கும் இந்நாவல், கலவரம் மனிதர்களைப் பிரித்துப்போடுவதையும் ஒருவருக்கொருவர் அந்நிய மாவதையும் எல்லோரையும் ஐயப்பட்டு நோக்கு வதையும் சித்திரித்துள்ளது. கலவரங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எல்லோரும் பலியாகின்ற நகரின் அவலம் இந்நாவலில் விவரிக்கப் படுகின்றது. பழைய நகரத்தில் நிகழும் கொலை, புதிய நகரத்திற்குச் செய்தியாக இருந்து, பின்னர் உண்மை நிகழ்வாக மாறுகின்றபோது நகரம் அச்சமும் மௌனமும் நீடித்துத் திகிலூட்டும் பிசாசாக மக்கள் மனதில் பேருருவம் எடுத்து நிற்கிறது. தூரத்தில் (பழைய நகரம்) நடக்கும் கலவரப் பிசாசு, புதிய நகரத்திற்குள் நுழைந்து, வேறு பகுதிகளில் நடந்து, கதைத்தலைவன் வாழும் பகுதிக்குள் நெருங்கிப் பக்கத்துத் தெருவில் கொலையாக மாறி, பிறகு இவர்கள் வாழும் தெருவையும் வீட்டையும் கொலைக்களமாக்குவதுடன் நாவல் முடிவடைகிறது. கொலைகள் நிறைந்த கலவரத்திற்குப் பிறகு எல்லோரும் இயல்பாக மாறுகின்றனர்.

“வாகனங்கள் இரைச்சலுடன் ஓடத் துவங்கின. இறந்தவர்களின் மனைவிகள் வர்ண சேலைகளிலிருந்து சாதாரண சேலைக்கு மாறினர். அம்மாக்களை நினைத்துக் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தன. தீக்கிரையான வீடுகளிலேயே அடுப்பெரிக்கப் பழகிக் கொண்டார்கள். வீட்டு ரத்தக்கறைகளுக்கு வெள்ளை பூசப்பட்டது.

வேறு வீடுகளுக்கு மாறி நம்பிக்கையை வளர்த்தார்கள். குடிநீரில் விஷத்தை நினைத்து குமட்டலோடு நீரைக் குடிக்கக் கற்றுக்கொண்டார்கள்.” (பக்.37-38)

பல உயிர்களின் பலிகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு நாற்காலிகளும் சாம்ராஜ்ஜியங் களுமே இலட்சியமாக இருக்கின்றன. கலவரம் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான கருவியாகப் பயன்படுகிறது. மக்களின் உயிர் அரசியல்வாதிகள் அதிகாரப்பீடங்களுக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களாகின்றன என்கிற உண்மையை இக்குறுநாவல் உணர்த்துகின்றது.

‘வர்ணங்களில்’ என்னும் குறுநாவல் கலவரங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் பயங்கரவாதத்தினை ஓர் ஓவியனின் நோக்கு நிலையிலிருந்து எடுத்துரைக்கிறது. அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பார்வை யற்றவர்களாக இருந்தாலும்கூடத் தண்டனைக்குள்ளா வார்கள் என்பதை இக்குறுநாவல் உணர்த்துகின்றது. ‘இன்னொரு நாளை’ குறுநாவலும் பெருநகரக் கலவரத்தைப் பின்புலமாகக் கொண்டதாகும். இக் குறுநாவல் கலவரக் காலத்தில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே ‘வேலியே பயிரை மேய்ந்தது’ போல் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘வேறிடம்’ என்னும் குறுநாவல் ஆந்திரத் தலைநகரில் வசிக்கும் ஓர் இலக்கியவாதியின் ஒரு நாளைய அனுபவத்தை விவரிக் கின்றது. அரசாங்க ஊழியர்களின் அலட்சியப் போக்கு, தண்ணீர்ப் பிரச்சினை என்பன இக்குறு நாவலின் பெருநகரச் சிக்கல்களாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

சுப்ரபாரதிமணியனின் புனைகதைகள் நகரங் களையே முதற்பொருளாயும் கருப்பொருளாயும் கொண்டுள்ளன. திருப்பூர் நகரம் தொழில்மயமாதலின் பின்புலத்தில் இயற்கையின் - மனித வாழ்வின் சீரழிவைக் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. செகிந்திராபாத் என்னும் நகரம் பெருநகர வாழ்வின் இயந்திரத்தனத் தையும், பரபரப்பையும், பதற்றத்தையும், கலவரத்தையும் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. திருப்பூர் பணம் என்னும் பிசாசால் பீடிக்கப்பட்ட ஊர். செகந்திராபாத் கலவரம் என்னும் பிசாசால் பீடிக்கப்பட்ட ஊர். சுப்ர பாரதிமணியனின் நகரத்திணை சார்ந்த புனைகதைகள் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், தனிமை, பெருந்திணை சார்ந்த ‘மிக்க காமம்’ என்பனவற்றை உரிப்பொருட்களாகக் கொண்டுள்ளன.

 

தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போன்று கொங்கு நாடும் தனித்த சமூக, அரசியல், பண்பாட்டு வரலாறுடையதாய்த் திகழ்கின்றது. கொடுமணலும் நொய்யலாறும் கொங்கு நாட்டின் பழமையைப் பறைசாற்றுகின்றன. பழந்தமிழிலக்கியங்கள் தொட்டே கொங்குநாடு பற்றிய இலக்கியப் பதிவுகள் காணக் கிடைக்கின்றன. பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலான பெருங்காப்பியங்களிலும் வையாபுரிப்பள்ளு முதலான சிற்றிலக்கியங்களிலும் கொங்கு நாட்டைக் குறித்துப் பதிவுகள் உள்ளன. தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கொங்கு வட்டாரச் சமூகப் பண்பாட்டு வாழ்க்கை விரிவான சித்திரிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி இன்று எழுதுகிற பெருமாள் முருகன், மா.நடராஜன், சூரியகாந்தன் போன்றோர் கொங்கு வட்டாரத்தை, தமது புனைகதை உலகின் மைய அச்சாகக் கொண்டுள்ளனர்.

subrabharathimanian 250

 

இவ் வரிசையில் சுப்ரபாரதிமணியன் கொங்கு நாட்டின் ஒரு பகுதியான திருப்பூர் வட்டாரத்தைத் தனது புனை கதைகளில் படம்பிடித்துள்ளார். ‘பின்னலாடை நகரம்’ அல்லது ‘பனியன் ஊர்’ என்று அழைக்கப்படுகின்ற திருப்பூர் நகரமே இவரது கதைகளின் கதாநாயகன். கொங்கு வட்டாரம் ஏராளமான மருதநில வயல் பகுதிகளைக் கொண்டது. என்றாலும் தற்காலத்தில் அது அதிக நகரப்பகுதிகளை உள்ளடக்கியதாகவும் தொழிற் சாலைகள் நிரம்பிய பகுதியாகவும் திகழ்கின்றது. பெரும்பாலான அண்மைக்காலக் கொங்கு நாட்டுப் படைப்பாளிகள், கொங்கு வட்டாரக்கிராமிய சமூக வாழ்க்கையை, பண்பாட்டு வாழ்க்கையைத் தமது கதைக்குள் கொண்டு வருகிறபோது, சுப்ரபாரதிமணியன் கொங்கு வட்டாரத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றான திருப்பூரின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வாழ்க் கையைத் தனது கதைகளுக்குள் கொண்டு வருகிறார். சுப்ரபாரதிமணியன் நகரத்திணையின் உரைகாரர்.

இந்தியப் பெருநகரங்களின் இயந்திரமான வாழ்க்கையும் - குரூர சாதி - மத, அரசியல் கலவரங்களும், வேர் களையும் அடையாளங்களையும் இழந்து மனிதத்தைத் தொலைத்த முகங்களற்ற மனிதர்களும் சுப்ரபாரதி மணியனின் கதைகளை ஆக்கிரமித்துள்ளனர். சுப்ரபாரதி மணியன் இருநகரங்களின் கதைசொல்லி. ஒன்று, அவர் நெடுங்காலமாய்ப் பணியாற்றிய ஹைதராபாத், சிகந்திராபாத் என்னும் இரட்டை நகரம். மற்றொன்று, தமிழகத்தின் ‘பருத்தி நகரம்’ திருப்பூர். ‘சுடுமணல்’ என்னும் நாவலும் ‘நகரம் 90’, ‘வர்ணங்களில்’, ‘வேறிடம்’, ‘இன்னொரு நாளை’ ஆகிய குறுநாவல்களும் ஆந்திர மாநிலத்தின் இரட்டை நகரங்கள் சார்ந்து இயங்குபவை. தறிநாடா, சாயத்திரை, நீர்த்துளி ஆகிய மூன்று நாவல்களும் ‘கவுண்டர் கிளப்’, ‘இருளிசை’, ‘மரபு’ ஆகிய குறுநாவல்களும் திருப்பூர் வட்டாரத்தைச் சார்ந்தவை.

Categories: 
Share Share
Scroll to Top